December 17, 2015

இ்ளைத்தவனுக்கு எள்ளைக்கொடு; கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு

இ்ளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு
வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள
உணவாகும். மிகவும் மெலிந்த தேகம்
கொண்டவர்கள் எள்ளைத் தின்றால்
நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான
உடலைக் கொண்டவர்கள்
கொள்ளைத் தின்றால், உடல்
மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும்
இப்பழமொழி கூறுகிறது.

”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம்
போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்க் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.
ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப்
பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து
காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும்,
அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச்
செடிகள் நிறைந்த

.”வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்;
ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை  மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும்.
ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி
குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு,
கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது
பழமொழி.

”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக்
குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத்
தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய்
ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால்
ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை
இப்பழமொழி விளக்குகிறது.

”ஒரு போது உண்பான் யோகி;
இருபோது உண்பான் போகி;
முப்போது உண்பான் துரோகி”
ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த
யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின்
அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும்
அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது.
இருவேளை உணவை
உட்கொள்வதால் வாழ்வு நோயற்று
இன்பமுடையதாக இருக்கும்.
மூன்றுவேளை உணவு
கொள்பவர்கள் நோயாளிகளாகவே
இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய்
போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு,
எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை
உண்டாக்கும்.

”அழுத பிள்ளை சிரித்ததாம்
கழுதைப் பாலைக் குடித்ததாம்”

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின்
அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை,
உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின்
குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால்
தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள்
கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப்
பால் புகட்டப்படுகிறது என்பதனை
இப்பழமொழி குறிக்கிறது.

. ”இருப்பவன் இரும்பைத் தின்பான்,
போறவன் பொன்னைத் தின்பான்“

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து
இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது.
எனவே இரும்புச்சத்து
அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப்
பொருளை உட்கொள்ளுதல்
வேண்டும்.
போக இச்சையை விரும்புபவர்கள்
பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள்.
இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு
போன்றவை ஏற்படும். இதனைக் குறிக்க, போறவன்
பொன்னைத் தின்பான் என்றார்கள்.

”ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக்
கொன்றவன் அரை வைத்தியன் என்று
வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக்
கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே
இதன் பொருளாகும். நாட்டுப்புற
மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின்
வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படு
கின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின்
பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால்
மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப்
பெற இயலும் என்பதை இப்பழமொழி
உணர்த்துகிறது.

”அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம்
ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி,
கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி
வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த
மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில்
உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப்
பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு
இதுவே முக்கிய காரணம் ஆகும்.

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம்
என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது
நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும்
குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும்.
ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின்
மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க,
பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல
பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி
இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும்
உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம்
உணவில் பயன்படுத்தப்படும்
பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு
நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில்
உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும்,
பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின்
தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது.
பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை
தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி
விட்டதாகக் கூறுகின்றனர்.

”விருந்தும் மருந்தும் மூன்று நாள்”

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச்
சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க
வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின்
பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து
உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல்
மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும்.
இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது
இப்பழமொழி.

”ஆவாரைப் பூத்திருக்கச்
சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில்
உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக்
கொண்டு தேநீர், கோப்பித்தூள் இவைகளுக்குப்
பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல்
நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின்
மகத்துவத்தைக் குறிக்க வந்த
பழமொழியாகும்.

இதுபோன்று ஏராளமான பழமொழிகள்
மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில்
சொல்லப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விசியம்.

December 11, 2015

மனித ஆசை எப்பொழுதுமே பேராசை தான்

ஒருவன் என்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள் என அறிவித்தான்.
மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்..
அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். எண்ணிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது.
ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல்
வரிசையாக நில்லுங்கள் என்றானாம்.
உடனே அனைவரும் வரிசையாக நின்றனர்.
வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.
அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன்.
அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும்,
இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்..
ஆயிரமாவதாக­ நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும்,
லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.
முதலில் நின்றவர் "இங்கு என்ன நடக்கிறது" என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து
விட்டார்.. இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே
கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.
இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே இல்லை...

நீதி; மனித ஆசை எப்பொழுதுமே பேராசை தான்.

தேனீ

இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
இனிக்கும் செய்தியல்ல!

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....